அருள்மிகு வனபத்ரகாளியம்மன் திருக்கோயில்- தேக்கம்பட்டி காலம் சொல்ல முடியாத காலத்தில் கட்டப்பட்டது இந்த வனபத்ர காளியம்மன் கோயில்.
சாகா வரம் பெற்ற மகிசாசூரனை அழிக்க அம்பாள் சிவனை நினைத்து வழிபட்டுப் பூசை செய்து சூரனை அழித்ததாள். அம்பாள் சிவனை நினைத்து இந்த வனத்தில் தியானம் செய்ததால், இங்குள்ள அம்மன் வனபத்ரகாளியம்மன் என்று பெயர் பெற்றது. இது தவிர ஆரவல்லி சூரவல்லி கதையோடும் இக்கோயில் தொடர்புடையதாக கூறப்படுகிறது.
மந்திரம், சூன்யம் ஆகியவற்றால் கொடிய ஆட்சி செய்த ஆரவல்லி, சூரவல்லி ஆகியோரை அடக்க பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமன் சென்று சிறைப்பட்டு, பின்னர் கிருஷ்ணன் அவனைக் காப்பாற்றினார். பின்பு, பாண்டவர்கள், அப்பெண்களை அடக்க, தங்களின் தங்கை மகன் அல்லிமுத்துவை அனுப்பி வைத்தனர்.
அவன் இங்குள்ள அம்மனை வழிபட்டுச் சென்று, ஆரவல்லியின் பெண்கள் சாம்ராச்சியத்தைத் தவிடுபொடியாக்க, அவர்கள் பயந்து போய் ஆரவல்லியின் மகளை அல்லி முத்துவுக்கு திருமணம் செய்து கொடுத்து, அவள் மூலம் நஞ்சு கொடுத்துக் கொன்றனர்.
இதையறிந்த அபிமன்யு, வானுலகம் சென்று அல்லிமுத்துவின் உயிரை மீட்டு வந்தான். நடந்த விசயங்களைக் கேள்விபட்ட அல்லிமுத்து, வெகுண்டெழுந்து, ஆரவல்லியை அடக்கப் புறப்பட்டுச் சென்றான். வழியில் வனபத்ரகாளியம்மனை வழிபட்டு, அவள் அருள் பெற்று ஆரவல்லியின் சாம்ராச்சியத்தை அழித்தான். இவை வரலாறாகப் பேசப்படுகிறது.
பூப்போடுதல் :
புதிதாகத் தொழில் துவங்கும் நபர்கள், திருமணம் பற்றிக் கேட்கும் நபர்கள், சுவாமி முன்பு பூ போட்டு கேட்பது வழக்கம். சிவப்பு, வெள்ளைப் பூக்களை தனித்தனி பொட்டலங்களில் போட்டு, அவற்றை அம்பாளின் காலடியில் வைத்து, ஏதவது ஒன்றை எடுத்துப் பார்க்கும்போது, மனதில் எந்த பூவை நினைக்கிறோமோ அந்தப் பூ வந்து விட்டால் அம்பாள் உத்தரவு தந்து விட்டதாக ஐதீகம். இது இக்கோயிலில் மிகவும் சிறப்பு.
15 ஆயிரம் கிடா வெட்டு :
வனபத்திரகாளியம்மன் என்றாலே கிடாவெட்டுதல் தான் நினைவிற்கு வரும். அம்மனுக்கு உகந்த ஆடு பலியிடுதல் ஞாயிறு, செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் நடக்கும். ஒரு வரத்திற்குள் சுமார் 300 லிருந்து 400 கிடா வரை வெட்டப்படுகிறது. ஒரு ஆண்டிற்கு சுமார் 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட கிடாய் வெட்டுகின்றனர்.
அம்மன் சுயம்புவாக முளைத்துள்ளது, குண்டமிறங்கல் எனும் தீமிதிக்கும் நேர்த்திக்கடன் இத்தலத்தில் சிறப்பு.
திருவிழா:
ஆடிக்குண்டம் ஜூலை 15 நாள் திருவிழா. அன்னையிடம் முறைப்படி அனுமதி பெற்று, ஆடி முதல் செவ்வாய் பூச்சாட்டி, 2 ஆம் செவ்வாய் திருபூக்குண்டம் அமைத்து, 3 ம் செவ்வாய் மறுபூஜை செய்து விழா கொண்டாடப்படும்.
36 அடி நீளமுள்ள திருக்குண்டம் அமைக்கப்படும். இதில் தீக்கங்குகள் உருவாக்கி பக்தர்கள் இறங்கி நடப்பார்கள். இத்திருவிழாவின் போது 2 லட்சம் பக்தர்கள் பங்குபெறுவது கண்கொள்ளாக்காட்சி. இவை தவிர வாரத்தின் செவ்வாய் வெள்ளிக் கிழமைகளில் இக்கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். மேலும் தீபாவளி, பொங்கல், தமிழ் ஆங்கில வருடப்பிறப்பின் போதும் இக்கோயிலில் பெருந்திரளான பக்தர்கள் வருகை தருகிறார்கள்.
இது தவிர அம்மனிடம் குழந்தை வரம் வேண்டி வணங்கி தொரத்தி மரத்தில் கல்லை கட்டிவிட்டு வழிபட்டால் தங்கள் பிரார்த்தனை நிறைவேறுகிறது. செய்வினை, பில்லிசூன்யம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தக்கோயிலுக்கு ஒருமுறை வந்து அம்மனை மனமுருக வேண்டிக்கொண்டால் அத்தகைய கோளாறுகள் நீங்குகிறது என்பது இத்தலத்துக்கு வரும் பக்தர்களின் அனுபவத்தில் கண்ட உண்மை என்கிறார்கள்.
வேண்டிய காரியம் நன்றாக முடிந்தால், பெண்கள் தாலியை உண்டியலில் போட்டு விடுவர். தங்கம், வெள்ளி, பணம் ஆகியவற்றை நேர்த்திக்கடன்களாக இத்தலத்து பக்தர்கள் வழங்குவது வழக்கமாக உள்ளது. இது தவிர கிடா வெட்டுதல்தான் இங்கு தனிச் சிறப்பு. வனபத்திரகாளியம்மன் என்றாலே கிடாவெட்டுதல் தான் நினைவிற்கு வரும். அம்மனுக்கு உகந்த ஆடு பலியிடுதல் ஞாயிறு, செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் நடக்கும். தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் 8 இரவு மணி வரை திறந்திருக்கும்.